திங்கள், 3 டிசம்பர், 2018

டெல்டா மனிதர்களின் வாழக்கையில் கஜா புயலின் பாதிப்பை பற்றிய பதிவு

கற்பனையல்ல ... டெல்டா மனிதர்களின் வாழக்கையில் கஜா புயலின் பாதிப்பை பற்றிய பதிவு.


அன்புள்ள ஆனந்தி ,                                                                             NOV-10 ,2018
            இன்றோடு 14 ஆண்டுகள் ஓடி விட்டது இந்த  அரபு  தேசத்தில்,     26 வயதில் இந்த ஊருக்கு வந்து, இரண்டு  ஆண்டுக்கு ஒரு முறை சில  மாதங்கள் மட்டும் நமது டெல்டா மண்ணில் , நமது  10 ஆண்டு திருமண வாழக்கையில் உன்னோடு  இருந்தது  சில மாதங்களே.
ஆனால் இந்த  14 ஆண்டுகால  உழைப்பில் , வாங்கி  போட்ட நிலத்தில் தென்னை வைத்து காய் காய்க்க ஆரம்பித்து விட்டது.
வாழையும்  ஆண்டு வருமானத்துக்கு ஆகி  விட்டது, இதனுடன் , மனதுக்கு பிடித்த வயலில் இரு போக சாகுபடி நடக்கிறது.  நமக்கும் நமது பிள்ளைக்குமான ஆடம்பரம் இல்லாத  எளிய தேவைகளுக்கு போதுமான வாழ்க்கை நடத்த  வருமானம் வருகிறது.மனம்  நிறைவாக இருக்கிறது. 

  நீ சொன்னது  போல்  40 வயது ஆகும் போது இந்த பாலைவன வாழக்கையை விட்டு விடலாம் , இந்த  முறை விடுமுறை நிரந்தரமானது . இனி பிள்ளைகளை பள்ளிக்கு விடுவது , பாடம்  சொல்லி தருவது, விவசாயம்  என  ஒவ்வரு  நாளும்  இனிமை ,
விட்டு சென்ற வருடங்களை நினைவில் கொள்ளாமல் இனி ஒவ்வரு நாளும் உன்னோடு, 
தீபாவளி, பொங்கல் எல்லாம் நாம் ஒன்றாக கொண்டாடுவோம் .
கேம்ப்  சாப்பாடு இல்லாமல் ,காலை டிபன் முதல்  இரவு உணவு வரைஎல்லாம்  உன் கையில்தான். உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நீ தனியாக  போக வேண்டியது இல்லை நாம் சேர்ந்து  போகலாம்.

 நாட்களை எண்ணி கொண்டு  இருக்கிறேன் .... விரைவில்  டெல்ட்டாவில் புதிய விடியலை நோக்கி.

 அன்புடன்

மகேந்திரன்.
சோழகன் குடிகாடு , ஒரத்தநாடு .


அன்புள்ள மாமாவுக்கு ,                                                              Nov 17,2018                                       

    நாம்  போடும் கணக்குகள்  ஒன்று என்றால் கடவுள் போடும் கணக்குகள் வேறு மாதிரியாகி   உள்ளது.  முன்தினம் அடித்த கஜா புயல்  நமது கனவுகளை நமது தோட்டத்து தென்னை மரம் போல் வேருடன்  பிடுங்கி  எறிந்து விட்டது.

 வைத்திருந்த 500 தென்னையில் ஏறத்தாழ 450 மரங்களை சாய்த்து விட்டது , பொங்கலுக்கு வெட்ட நினைத்த 2 ஆயிரம் தார்களில்  பெரும்பாலானவை பிடுங்கி எறிந்து விட்டது.
வயற்காடு சம்பா பயிரும் சாய்ந்து விட்டது ...

  வரும் நாட்கள் கடினமாக தான்  இருக்கும் போல் தெரிகிறது .கையிலிருக்கும்  சேமிப்பை வைத்து 4 முதல் 5 மாதம் சமாளித்து விடலாம், நாம் முழுவதும் மீண்டு  எழ சில வருடங்கள் ஆகும் ,
 மாமா வருத்தமாக தான் இருக்கிறது ,  இன்னும் 2 முதல் 5 ஆண்டுகள் நீங்கள் பாலைவன வாழ்க்கையை தொடர்ந்தால் மட்டுமே நாம்  கவுரவமான வாழ்க்கை இங்கு வாழ முடியும்,

 இத்தனை  வருடம் காத்திருந்த நானும் என் பிள்ளைகளும் இன்னும் சில வருடம் காத்து இருக்கிறோம் .

  நமது விடியலுக்கான நாள் தள்ளி போய் இருக்கிறதே தவிர தொலைந்து விடவில்லை .

நம்பிக்கையுடன்

ஆனந்தி
குமார் - இரண்டாம் வகுப்பு
 பூஜா - LKG

by வேலு மருதையன் -