Thursday, 20 July 2017

மீண்டு வாருங்கள் உலக நாயகரே

ஒரு காலத்தில்  கமலஹாசனின்  திரைப்படங்களின்  ரசிகன்  நான். அவரது  சிப்பிக்குள் முத்து , தேவர்  மகன் , புன்னகை  மன்னன்  போன்ற  படங்களுக்கு மிக நீண்ட  வரிசையில்  நின்று  டிக்கெட் வாங்கியவர்களில் நானும் ஒருவன் ..
ஆனால் , கடந்த  பத்து  ஆண்டுகளாக அவரது  இமேஜ் அவரது  சுமையாகி  விட்டதோ  என்று  தோன்றுகிறது .. கலைஞனாக  கமல் அமீர்  கானை  விட மிக பெரிய திறமைசாலியாக  இருக்கலாம்  . ஆனால்  கடந்த சில ஆண்டுகளாக லகான்,டங்கள் ,PK ,த்ரீ  இடியட்ஸ் , போன்ற  மக்கள்  மனதிற்க்கு நெருக்கமான  அதே  நேரத்தில்  கருத்தையும்  சொல்லும்  வெற்றி படங்களை  கொடுக்கிறார் அமீர் கான் . ஆனால்  கமல ஹாசன் தன்னுடைய  புத்திசாலி  தனம்  காட்சிக்கு காட்சி  தெரிய  வேண்டும்  என்றே படம்  எடுப்பது  போல்  தோன்றுகிறது . உத்தம  வில்லன் , மன்மதன்  அம்பு, விஸ்வருபம் எல்லாம்  அந்த  கேஸ்  தான் .மக்களின்  மனதுக்கு  நெருக்கமான படங்களை கொடுத்து  வருடங்கள்  ஆகி  விட்டது.

என்னுடைய 150 ரூபாயை   கொடுத்து கமல்ஹாசன் ஒரு   அறிவாளி  என்பதை நான்  அறிய  வேண்டும் என்ற அவசியம் இல்லை ..
இதில்  பிக் பாஸ் , அரசியல்  மோதல்  என்று  தனது retirement  நோக்கி  வேகமாக போய் கொண்டிருக்கிறார் .
மீண்டு  வாருங்கள் உலக  நாயகரே 


உங்களுக்கு ஹீரோக்கள் தேவை இல்லை

 தமிழ் சினிமாவுக்கு மற்றும்  தமிழ்,  ஊடகங்களுக்கு   தான் ஹீரோ கள்  தேவை  , உங்கள்  வாழ்க்கைக்கு அல்ல ...
 வாழ்க்கை ஒன்றும்  தமிழ்  சினிமா  அல்ல , ஒற்றை  தலைவன்  வருவான்  ஒட்டு  மொத்தமாக  மாற்றுவான் என்று  இருந்தால்  ஒவ்வரு  முறையும்  ஏமாற்றமே  மிஞ்சும் ..

போன  மாதம்  முழுவதும் ரஜினி யை  வைத்து  ஜல்லியடித்த  ஊடகங்கள்  இந்த  மாதம்  கமலை  வைத்து  ஜல்லியடிக்கின்றனர் .
.
50 வருடம்  தாங்கள்  சார்ந்து  இருந்து  துறையில் .
10 கோடி  ரூபாய் ,  படத்தில்  5 கோடி  ரூபாய்  தனி  மனிதரின்  சம்பளம் என்று வாங்கியவர்கள் , முதல் நாள் திரைபட வெளியீட்டில்  60 ரூபாய் டிக்கட்டை 300 ரூபாய்க்கு  விற்று சம்பளம்  ஈட்டியவர்கள் ,  தன்னுடைய  படத்தை ஆர்வமாக   பார்க்க வரும்  ரசிகனின் தலையில்   10 ரூபாய்  பாப் கானை  150 ரூபாய்க்கு திரையரங்கம்  கட்டுவதை  கண்டுகொள்ளாமல் இருந்த  நல்லவர்கள் உங்களை ஊழலின்  பிடியில் இருந்து  காப்பாற்றுவார்கள் என்று  நம்பினால் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் .

உண்மையான  ஹீரோ  நீங்களோ  அல்லது  உங்களுக்காக  உள்ளூரில்  உழைக்கவும் /போராடவும்  தயாராக  இருப்பவர் தான் , AC  அறையில்  அமர்ந்து twitter பதிவு  ஈடுபவர்கள்  அல்ல .


Wednesday, 19 July 2017

உங்கள் வீட்டை சுத்த படுத்துங்கள் உலக நாயகரே

ஜனநாயாக  நாட்டில்  அனைவருக்கும்  அரசியலுக்கு வர  உரிமை  உள்ளது . அதே போல்  விமர்சிக்கும்  உரிமை  அனைவருக்கும்  உள்ளது, அதே நேரத்தில்  ஒரு  குற்றம் சுமத்தினால்  அதை  நிரூபிக்கும்  கடமையும்  உள்ளது ..

 இன்று  உலக  நாயகன் எனப்படும்  கமலஹாசன்  குற்றம்  சுமத்தியுள்ளார் .. அதை  நிரூபிக்க  கவர்னரிடமோ  அல்லது  மத்திய  அரசிடமோ  லஞ்ச  ஊழல்  துறையிடமோ  தகுந்த  ஆதாரங்களை  வழங்க வேண்டும் ..

இன்று  உங்களை  ஆளாக்கிய  திரைத்துறை குற்றுயிரும்  குலையுருமாக உள்ளது ..GST வரி  விதிப்பு மட்டும்  காரணம் அல்ல , மிக  அதிகமான  நடிகர்  சம்பளம் , அதிகரிக்கும் தியேட்டர்  கட்டணம் , பார்க்கிங் , தின்பண்டங்கள்  விலை , வெளி  வர முடியாத  திரைப்படங்கள்  என பல ..உங்களை வளர்த்து  ஆளாக்கிய வீடு  குப்பை  மேடாக  உள்ளது ..ஊரை  சுத்த படுத்த  கிளம்பிய  நீங்கள் உங்கள்  வீட்டை  சுத்த படுத்தி வீட்டீர்களா .
இன்னும்  சொல்ல  போனால்  உங்களின் BIG boss நிகழ்ச்சியால் கூட சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை காட்சிகள் வசூல் குறைகிறது  என்ற  குற்றச்சாட்டு உள்ளது ..அதை நிறுத்த  முடியுமா என்று  பாருங்கள்
8 கோடி தமிழர்களை  சந்திக்கும் முன் 8 நடிகர்களின் சம்பளத்தை குறைத்து தமிழ்  சினிமாவை வாழ வைக்க முடியுமா  என்று பாருங்கள் ..

அரசியல்  எல்லாருக்குமானது ..உழைப்பும் ,தகுதியிம் இருந்தால்  நீங்களும்  ஜெயிக்கலாம் ..ஆனால்  வீடு  தேடி  வந்து முடி சூடுவார்கள் என்று நினைக்காதீர்கள் ..தமிழக மக்கள் வெள்ளி  திரையில் தலைவர்கள் தேடலை நிறுத்தி விட்டார்கள்

உங்கள் வீட்டை  சுத்த படுத்துங்கள் உலக நாயகரே

Wednesday, 5 July 2017

ஆரம்ப கல்வி அட்ராசிட்டிஸ் ...ஒரு நகைச்சுவை பார்வை

நான்  படிக்கும்  காலத்தில்  பெற்றோர்கள்  பள்ளிக்கு  வந்து  ஆசிரியர்களை  சந்திப்பது  ஒரு  அரிதான  நிகழ்வு. யாருடைய  பெற்றோராவது  வந்து  ஆசிரியரை  சந்தித்தால்  அந்த  மாணவன் , சரியாக  படிக்காத  காரணத்திற்காகவும், ஒழுக்க சீர்கேடுகள் தான் காரணமாக  இருக்கும். பெற்றோரை   பள்ளிக்கு வரவழைப்பதை  ஒவ்வரு  மாணவரும்  பெரிய  அவமானமாக  கருதினோம். பெற்றோருக்கு  வருடம்  ஒரு  முறை  சீருடை , புத்தகங்கள்  வாங்கி தருவதை  தவிர  கல்வி   சம்பந்தமான  வேலைகள்  கிடையாது. ரேங்க்  சீட் மட்டும்  தான்  ஆசிரியருக்கும், பெற்றோருக்கும்  உள்ள  ஒரே தகவல் தொடர்பு  மற்றும்  மாணவரின்  கல்வி முன்னேற்றத்தை  கண்காணிக்கும்  வழி.

   ஆனால்  இப்போது அதுவும்  ஆரம்ப  பள்ளிகள் (ஐந்தாம் வகுப்பு வரை) அடிக்கிற  லூட்டி  தாங்க  முடியவில்லை.

    எந்த அளவு  பள்ளி  மாணவர்களது  பெற்றோர்களை  பிஸியாக வைத்து கொண்டு  உள்ளதோ  அந்த  அளவு  நல்ல  பள்ளியாக  கருத  படுகிறது.  நமது அரசு  பள்ளிகள்  வழுக்கி  விழும்  ஏரியாவும்  அதுதான் .

  Induction  Day , Fathers  Day,Mothers Day , Grand  Parents  Day ,  Cousins   Day ,Graduation  day , SPORTS  day  , school  annual  day  ன்னு  பல   தடவை , அது  இல்லாமல்   டேர்ம் சீட்  (Rank சீட்) தருகிறோம் னு நாலு   தடவை  பள்ளிக்கு கூப்பிட்டு  விடுகிறார்கள். அது  இல்லாமல்  சில  சமயம்  சிறப்பு  விருந்தினர்  கல்வி  பத்தி  lecture  தற்றார்னு  கூப்பிடுகிறார்கள்.

எனது அப்பா   வாழ்நாள்முழுவதும்  எனக்காக   பள்ளிக்கு  வந்ததை  நான்  புள்ளைங்க  play  ஸ்கூல் படிக்கும்போதே  தாண்டி விட்டேன் . இப்போது  சனிக்கிழமை பொழுது  போக்கே ஸ்கூலுக்கு  போறது  என்றாகி  விடுகிறது.

 அதை  விட  அதிகமாக activities , Project  work , cultural participation  னு சொல்லி  வாரம்  மூணு  நாள்  ஸ்டேஷனரி  கடை  கடையா  அலைய  விட்டு  விடுகிறார்கள் .சில பெற்றோர்  சம்பளம்  வாங்கற  நிறுவனத்தை  விட  அதிகமா புள்ளைங்க ஸ்கூலுக்குத்தான்  வேலை  பாக்ராங்க

ஸ்கூள் டைரி , ஸ்கூல்  app , ஸ்கூல்  வாட்ஸப்  குரூப் , Tuition வாட்சப் , ஸ்கூல்  பஸ்  டிரெக்கிங்,னு  சொல்லி  நம்பள அலெர்ட்  ஆறுமுகமாவே   வச்சிருக்காங்க .

ஒழுங்கா  இது  எல்லாத்திலும்  ஆக்ட்டிவா  இருந்தா  நல்ல  பெற்றோர் இல்லாவிட்டால்  நீங்க  புள்ளைங்க  மேல  அக்கறை   இல்லாதவர் ன்னு  சொல்லி  விடுவார்கள் .

ஒரு  புள்ளைக்கே  அலைய  முடியவில்லைனு  ரெண்டாவது  வேணுமான்னு   யோசிக்க வைத்து மக்கள்  தொகை  பெருக்கத்தை  கன்ட்ரோல் செய்ததில்  இந்த  பள்ளிகளுக்கு  பெரும்  பங்கு  உள்ளது


ரொம்ப  எழுதி  விட்டேன் .அதுக்குள்ள  எதாவது  புள்ளைக்கு   ஆக்ட்டிவிட்டி  ஏதாவுது குடுத்து  இருக்காங்களா ன்னு செக்  பண்ணனும்  பை ....


Thursday, 29 June 2017

பாகுபலி கட்டப்பாவும் O பன்னீர்செல்வமும் ...


         ஜெயலலிதாவுக்கு சசிகலாவுடன்  சில  சமயம் கருத்து  வேறுபாடு  வந்தது , பன்னீர்செல்வதுடன்   ஜெயலலிதாவுக்கு  கருத்து  வேறுபாடு  வந்தது  இல்லை  என்று  கூறுபவர்களுக்கு,      ஜெயலலிதா சசிகலாவின்  கருத்தை  கேட்பவராக  இருந்தார்  அதனால்  அவரோடு  கருத்து  வேறுபாடு  வந்தது.  பன்னீர்செல்வம்  கருத்து  சொல்லும்  நிலையில்  எங்கு  இருந்தார்?
   
அமரேந்திர பாகுபலி சிவகாமியுடன்  கருத்து வேறுபாடு வந்தது , ஆனால்  கடைசி  வரை  சிவகாமி தேவிகாக  உயிரை  விடுபவராகத்தான்  இருந்தார் அது போன்றுதான்   சசிகலா.

     கடடப்பா   தனது  விசுவாசத்தை  மாற்றமால்  கடைசி  வரை  இருந்தார்.. ஆனால்  இந்த  கட்டப்பா  தனது  பதவிக்கு  ஆபத்து  வந்தவுடன்  தனது  விசுவாசத்தை  டெல்லி  சுல்தானுக்கு  மாற்றி விட்டார்.விசுவாசம்  என்றால் உண்மையில் தனது  எஜமானரின்  உயிருக்கு  ஆபத்து  என்றவுடன்  தனது பதவியை  தூக்கி  எறிந்து  விட்டு  கேள்விகேட்டு  இருக்க  வேண்டும்  ஆனால்  தனது  பதவிக்கு  ஆபத்து  வரும்  வரை  அமைதி  காத்தவர்தான்  நமது  கட்டப்பா..

  டெல்லி  சுல்தான்  ஏன்  சசிகலாவை  விரும்பவில்லை, சசிகலா  எந்த  கணத்திலும்    தனது  புத்தி  கூர்மையால்,  பிடியில்  இருந்து  விலகி  தன்னை  நிறுவி கொண்டு விடுவார்  என்ற  பயம்  இருந்தது,ஆனால் கேள்வி  கேட்க  முடியாத , பதவியை  காப்பாற்றி  கொள்ள துடிக்கும்  அடிமை  தான்  சிறந்தவர்  என தான்  டெல்லி   நினைத்து விரும்புகிறது ..


Tuesday, 20 June 2017

தமிழ் சினிமா பிரிந்தவர் இணையும் பாடல்கள் -ஒரு துளி

பிரிந்தவர் கூடினால் கண்ணீர்  தான்  அங்கு மொழி  என்று சொல்வது உண்டு ..

தமிழ்  சினிமா  ஆரம்ப காலத்தில்  இருந்தே பிரிந்தவர் சேரும்  காட்சிகள்  நிறைய  உண்டு . அதுவும்  பாடலால்  இணையும்  காட்சி கள்  பல,  இது  போன்ற   காட்சிகளில் நடிப்பை  விட , பாடல்வரிகள் மற்றும்  பாடலின் பின்னணி இசைதான் காண்பவருக்கு  ஆனந்த கண்ணீரை  வரவழைக்கும் சக்தி  உடையது .


எனக்கு  மிகவும்  பிடித்த   அத்தகைய பாடல்களில்   ஒன்று ,
நாளை  நமதே  படத்தில்  வரும்  அன்பு  மலர்களே, நாளை  நமதே தாய்  வழி  வந்த  தங்கங்கள்  எல்லாம் ஓர் வழி  நின்று  நேர் வழி  சென்றால்  நாளை  நமதே பாடல் ,
தம்பி  பிரிந்து போன  சகோதரர்களை  பாடலை  பாடி  கண்டுபிடிப்பார், SPB  தம்பி  வேடத்தில்  நடித்தவருக்கும் , TMS  புரட்சி  தலைவருக்கும்  பின்னணி கொடுத்து  இருப்பார்கள்.

வருட  கணக்கில் பிரிந்த   சகோதரர்கள்  சேர்ந்தால்   முதலில் நலம் விசாரித்து கொள்வார்களா இல்லை  பாடலை  முழுதாக  பாடி முடிப்பார்களா என்ற  கேள்வி  எழாமல்  உங்களை  மயங்க  வைப்பதுதான்   திரைப்படத்தின்  மேஜிக் ...

90 களில்   சூப்பர்  குட்  பிலிம்ஸ்  காலத்தில்  இத்தகைய  காட்சிகளும்  பாடல்களும்  அதிகம்.உதாரணமாக
நான் பேச  நினைப்பதெல்லாம்  படத்தில் ஆனந்த் பாபு  , மோகினி  இணையும்  ஏலேலம்  கிளியே  பாடல்....
(இதிலும்  ஜேசுதாஸ்   குரலில் முதலில் பாடிய  பாடலை  இறுதி  காட்சியில்  மனோ  பாடி இருப்பார் , யாரும்  அதை  பொருட் படுத்தவில்லை..)

துள்ளாத   மனமும்  துள்ளும்  படத்தில்  விஜய் , சிம்ரன்  இணையும் இன்னிசை பாடி  வரும்  பாடல் .

புது வசந்தம்  படத்தில்  வரும் சித்தாரா  நண்பர்களுடன்  இணையும்  பாட்டு  ஒண்ணு  நான்  பாடட்டுமா பாடல்  இப்படி  பல ...


கடைசியாக ...மாய  நதியிலே  பாடல்  கபாலியில் ...அதுவும் பல  வருடங்கள் பிரிந்து  இணைந்தவர்கள்  சேர்ந்த பிறகு  வரும்  ஒரு  நல்ல பாடல்..

இப்போது  எல்லாம்  செல்போன் , இணையம் ,Facebook, வாட்ஸப்  காலம்  ஆகி  விட்டதால்  இது  போன்ற  பாடலுடன்  இணையும்  காட்சிகள்  குறைந்து  விட்டது  தமிழ்  சினிமாவில் ..

ஆனாலும் பிரிந்தவர்கள்  இணையும் இசையோடு  வரும்  ஆனந்த  கண்ணீர்  பாடல்களை  நாம்  கொஞ்சம்  தொலைத்து  விட்டோம்  என்றே தோன்றுகிறது.


(பிகு ):- இத்தைகைய  பாடல்கள்  சிலவற்றை  நீங்கள்  பின்னுட்டத்தில் (கமெண்ட்ஸ்) பகிர்ந்தால் மகிழ்ச்சி .

Thursday, 8 June 2017

கவிஞர் வாலி ரசித்ததில் ஒரு துளி


தசாவதாரம்  கல்லை  மட்டும்  கண்டால்  பாடல்  எனக்கு  மிகவும்  பிடித்த  பாடல்களில்  ஒன்று..

கமலஹாசனின்  உண்மையான  தாயார்  பெயர்  ராஜலக்ஷ்மி ,தந்தை  பெயர்  ஸ்ரீனிவாசன் ...

சைவ  சோழ அரசனுக்கு எதிராக விஷ்ணு  புகழ்  பாடும்  இந்த  பாடலில்,

 ராஜலக்ஷ்மி  நாதன்  ஸ்ரீனிவாசன் தான் , ஸ்ரீனிவாசன்  சேய் இந்த   விஷ்ணுதாசன் தான்  (கமலின்  கதாபாத்திர  பெயர்)

என்று  வாலி  எழுதியது  பௌண்டரி  என்றால் ,,,


நாட்டிலுண்டு  ஆயிரம்  ராஜ  ராஜர்தான் , ராஜனுக்கு எல்லாம்  ராஜன்  இந்த  ரங்க ராஜன் தான்    (வாலியின்  இயற் பெயர் ரங்கராஜன் )

என்றுஅடுத்த  வரியில்  வாலி  எழுதியது  சிக்ஸர் ...

காட்சிக்கு  பொருத்தமான பாடலில்  , கமல் ,மற்றும்  தன்னையும் பொருந்தியது வாலியின்   அபார கற்பனை.. 

Wednesday, 17 May 2017

இறப்பு தேதி , கடவுளின் அப்டேட்

 கடவுளின் நண்பர் : மனிதர்கள்   ரொம்ப  அதிகம் ஆட்டம்  போட  ஆரம்பித்து  விட்டனர் . சாவே  இல்லை  என்பது  போல் வாழ்ந்து  தங்களது  தேவைக்கு  அதிகமாக   சொத்து குவித்து  வருகிறார்கள், இதனை  சரி  செய்ய  வேண்டும், கடவுளே ?

கடவுள் :-  என்ன  செய்யலாம் ?

நண்பர் :_  எல்லா  மனிதர்களையும்   (expiry  date ) இறக்கும்  தேதியை தலையில் தெரிவது  போல்  எழுதி  update செய்து   விடலாம் . அதற்கு  பிறகு  மனிதர்கள்  ஓரளவு  கட்டுப்பாடுடன்  நடந்து  கொள்வார்கள் .

கடவுள்  அப்படியே  ஆகட்டும்  அப்டேட்  செய்தார்.

அன்று  முதல்  அணைத்து  மனிதர்கள் தலையிலும் (expiry date) இறப்பு தேதி  தெரிய  ஆரம்பித்தது .

ஆனால்  நடந்தது வேறு ...

குறைந்த  ஆயுள்  மனிதர்கள்  உழைக்க  மறுத்தனர் . இருக்கும்  வரை  சந்தோசமாக  வாழ  வேண்டும்  என நினைக்க  ஆரம்பித்தனர். நிறுவனங்களும்  ,குறைந்த  ஆயுள்  உள்ளவருக்கு  வேலை  தர  மறுத்தது . நீ  பாதில  போய்டா  ரிப்ளஸ்ட்மென்ட் கிடைக்காது  என்று.

பெற்றவர்கள்  குறைந்த  ஆயுள்  கொண்ட  குழந்தைகளை வளர்க்காமல் அனாதை  இல்லத்தில்  தர  ஆரம்பித்தனர்.                    குறைந்த  ஆயுள்  கொண்ட  பெற்றோர்  நீண்ட  ஆயுள்  உள்ள  பிள்ளையை  தங்களுக்கு  பிறகு யார்  பார்த்து கொள்வார்கள்  என்று  யோசிக்க  ஆரம்பித்தனர்..

திருமண விளம்பரங்கள்   60 வயசு  வரை  வாழும்  பெண்ணுக்கு  60 வயசு  வரை  வாழ கூடிய  மணமகன்  தேவை  என்று வர  ஆரம்பித்தது  . இறப்பு  தேதி  பொருத்தம்  தான்  முதல் பொருத்தமாக  பார்க்க  ஆரம்பித்தனர். காதலிப்பவர்களும்  இறப்பு  தேதி   பார்த்து  காதலிக்க  ஆரம்பித்தனர்.

உயிர்  காக்கும்  மருத்துவம்  என்று  ஒன்று  இல்லாமல்  போய் விட்டது .. எப்டியா  இருந்தாலும் நான் உயிரோடு  இருக்க  போறேன் . கை , கால் , உடம்பு  நல்லா  வச்சிருந்தா  போதும்  என்று அதை  மட்டும்  சரி  செஞ்சுடுங்க  என்று  டாக்டர்களை  மெக்கானிக்  ஆக  மாற்றினார்கள் .

நிறைய  பேர் எங்கள்  மதத்தில்  தான்  அதிக ஆயுள் கொண்ட  குழந்தைகள்  கிடைக்கிறது  எனவே இங்கு  வந்து  விடுங்கள் என்று கூற ஆரம்பித்தனர். நிறைய  சாமியார்கள்  இறப்பு தேதியை  மாற்றும் வல்லமை எங்களுக்கு  இருக்கிறது என்று  புருடா  விட்டு கல்லா  கட்ட  ஆரம்பித்தனர் .

இறப்பு  தேதி  நெருங்க  நெருங்க  மனிதர்கள்  எல்லோரையும் மகிழ்ச்சியாக  வைத்திருந்து மனிதர்கள்  இறப்பார்கள்  என்ற  கடவுளின்  எதிர்பார்ப்புக்கு   மாறாக மனிதர்கள் நீண்ட  ஆயுளை  உடைய தனது   குடும்பத்தாராக இருந்தாலும்  நண்பராக  இருந்தாலும்    பொறாமை  அடைந்து , வெறுப்பையும், கோபத்தையுமே  உமிழ  ஆரம்பித்தனர்.

நீண்ட ஆயுள் உள்ளவர்களுக்கோ , தங்களது உற்ற  நண்பர்கள் ,உறவினர்கள் ,குடும்பத்தினர் குறைந்த  ஆயுளுடன்  இருப்பதை  காணும் போது குற்ற  உணர்ச்சியில் புழுங்க  ஆரம்பித்தனர் ..

குறைந்த  ஆயுள்  கொண்ட  மனிதர்கள் கொண்ட குழுக்கள் அமைக்க  ஆரம்பித்து , நமக்கு  இல்லாத  உலகம் வேறு  யாருக்கும் இருக்க கூடாது என்று  நாச  வேலைகளில்  ஈடுபட  ஆரம்பித்தனர்

மொத்தத்தில்  நிலைமை இன்னும்  மோசமானது

ஒரு  சின்ன  நம்பர்  அப்டேட்  இவ்ளோ பிரச்சனை  ஆயிடுச்சே என்று கடவுள் பழைய   இறப்பு  தேதி  இல்லாத  வெர்ஸனை  தொடர  ஆரம்பித்தார் .

சாகுற  நாள்  தெரிஞ்சா வாழற  நாள்  சந்தோசமாக இருக்காது  என்ற ரஜினி பட  வசனம் போல் . நமக்கு  சாகுற   நாள்  தெரியாது ஆனால் வாழும் வரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவரையும் மகிழ்ச்சியாக வைத்து  இருப்போம் ..


(concept  inspired by the   story  some where  I  read )


Friday, 5 May 2017

மோடிஜி தந்த அதிர்ச்சி ? - நகைச்சுவை கற்பனை

காலையில் எழுந்து பார்த்தால், எப்போதும்  வெளியில்  கிடக்கும்  பால் , மற்றும்  பேப்பர்ஐ  காணவில்லை ... பால்  மற்றும்  பேப்பர் போடுபவர்  வேலைக்கு  வரவில்லை .... சரி  நடந்து  போய் பால்  கடைக்கு  போனால்    பால்  விலை  நாளை  முதல்  லிட்டர் 500 ரூபாய்  என்று  அறிவிப்பு  வைத்து இருந்தார்கள் .

வீட்டுக்கு  திருப்பினால்  அபார்ட்மெண்ட்  வாசலில்  இருந்த  செக்யூரிட்டி யை  காணவில்லை . வீட்டில்  மனைவி  வீடு துடைக்க வரும்  அம்மா நாளை  வேலைக்கு  வர மாட்டார்களாம் அப்டியே  வரணும்னா  மாதம் 8000 ரூபாய்  வேண்டும்  என்று  கூறியதாக சொன்னாள் .

சரி  காரை  எடுத்து  ஆபீஸ் செல்வதற்கு  பெட்ரோல்  போட்டால்  லிட்டர் 750 ரூபாய்  என்று  10 லிட்டர்க்கு  7500 ரூபாய்  வாங்கினார்கள் .
காலையில் வீட்டில்  காபி   சாப்பிட்டவில்லை என்று  ஆபீஸ் கேன்டீனில்  காபி ஆர்டர் செய்தால்  500 ரூபாய்  பில் வந்தது .
வீட்டு  உரிமையாளர்  இந்த  மாதம்  முதல் வீட்டு  வாடகை 70,000 ரூபாய்  என்று  அதிர்ச்சி  அளித்தார் .

என்னடா  காலைலேந்து  அதிர்ச்சி  மேல் அதிர்ச்சியாக இருக்கிறதுன்னு   இணையதளத்தில் செய்திகளை   பாத்தா ..

நேற்றிரவு  வெளிநாட்டில்  உள்ள  கருப்பு  பணம்  முழுவதும் மீட்கப்பட்டு ஒவ்வரு இந்தியரின்  வங்கி  கணக்கிலும் 15 லட்சம் நமது இந்திய  பிரதமரால்  டெபாசிட் செய்யபட்டுள்ளது

என்று  தலைப்பு  செய்தி  வந்து  இருந்தது ....என்னடா  நமக்கு  வரலையேன்னு  பாத்தா
"  ஏற்கனவே  வருமான  வரி  செலுத்துபவர்களுக்கு  15 லட்சம்  கிடையாது  என்று  பெட்டி  செய்தி

என்ன  கொடுமை  இது ?  என்று  கத்திய  என்னை  பார்த்து மனைவி "  எப்ப  பாத்தாலும்  நியூஸ்  சேனல்  பாத்துட்டு , நடுராத்திரி  எதாவுது கனவு  கண்டு  கத்த  வேண்டியது " என்று  சொன்னாள் .

நல்லவேளை  கனவு  தானா  என்று  சந்தோச  பட்டேன் ....

புழக்கத்தில்  திடீரென  சில லட்சம்  கோடிகள்   வந்தால்,  விலைவாசி  எப்படி  உயரும் , திடீரென  இலவசமாக  கிடைக்கும்  பணம் மக்களை   எந்த  அளவு  சோம்பேறியாக்கும் ...இது  தெரியாம  வாக்குறுதி  அளிப்பவர்களையும் ,அதை  நம்பி வாக்களிப்பவர்களையும் என்ன  செய்வது?Wednesday, 3 May 2017

தெர்மக்கோல் அமைச்சரும், பணமதிப்பிழப்பு பிரதமரும்


சென்ற வாரத்தில் 60 ஏக்கர்  பரப்பளவில்  தண்ணீர்  தேங்கி  இருக்கும் வைகை அணையில் தண்ணீர்  நீராவி  ஆவதை  தடுக்க  தெர்மோகோல் அட்டையை  விட்டார்   தமிழக  அமைச்சர்  , அந்த  முயற்சி படு தோல்வி அடைந்ததால்   இது  மிக பெரிய  முட்டாள்தனம்  என்று  ஊடகங்களிலும் ,சமூக வலை  தளங்களிலும்  கழுவி ,கழுவி  ஊற்றப்பட்டார்.

இதை விட  பெரிய  முட்டாள்தனம்  ,
கடந்த  நவம்பரில்  நடந்த பணமதிப்பு இழப்பு  நடவடிக்கை ,
ஏறத்தாழ 85%  பணத்தை  ஒரே  அறிவிப்பின் மூலம்  மதிப்பிழக்க செய்தார்கள்.  3 லட்சம்  கோடி  கருப்பு  பணம் ஒழிந்து விடும் , கள்ள நோட்டு  ஒழிந்து  விடும் , ஜனவரிக்கு பிறகு  புதிய  இந்தியா பிறக்கும் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தி கோடிக்கணக்கான  மக்களை  ATM  வாசலில்  நிறுத்தினர் .. ஆணால்  98%  பணம்  டிசம்பர்  இறுதியில் வங்கிக்கு  திரும்ப வந்து  விட்டது .கள்ள  நோட்டை  பற்றி பேச்சே  காணோம் . ..ஒரு  மாற்றமும்  இல்லை வரவில்லை   ,இப்போது டிஜிட்டல் இந்தியா  என்று ஜல்லியடிக்கிறார்கள் .

தெர்மோகோல் திட்டத்தை விட  இது  மிக பெரிய முட்டாள்தனமாக முடிவடைந்து விட்டது .
தெர்மோகோல் திட்டத்தில்  இழப்பு 10 ஆயிரமோ  அல்லது  10 லட்சமோ தான் , பணமதிப்பு இழப்பினால்  100க்கும் மேற்பட்ட உயிர்  சேதம் , வேலை  இழப்பு , ஆயிரக்கணக்கான கோடிகளில் பொருளாதார இழப்பு .

 தெர்மோகோல் அமைச்சராவுது  திட்டம்  தோல்வி  அடைந்தது  என்பதை  கவுரவமாக ஒப்பு கொண்டு விட்டார் . பிரதமரோ , நிதி  அமைச்சரோ  ஒப்பு கொள்ள கூடவில்லை .தெர்மோகோல்  அமைச்சரிடம்  காட்டிய   வீரத்தை  ஊடகங்கள்  யாரும் அவர்களிடம் காட்ட  முடியவில்லை.


Thursday, 20 April 2017

வலுக்கும் வலது சாரி சிந்தனை .

 பொதுவான  சமுதாயம் , அது வளமோ, செல்வமோ இருப்பதை  பகிர்ந்து  கொள்வது . உலகின்  வளம்  அனைவருக்கும் பொதுவானது இதில்  நீங்கள்  உங்கள்  அறிவாற்றலால்  அல்லது  பலத்தால்  நீங்கள் அதிகம்  பெற்றால்  அதை பலவீனமானவருடன்  பகிர வேண்டும்  இது  இடதுசாரி  சிந்தனை.

வலது  சாரி  சிந்தனை  என்பது  ஒரு  குறிப்பிட வட்டம் அது  மதமோ, தேசமோ , மாநிலமோ ,நான் உயர  வேண்டும்  என்று  எண்ணுவது . அதற்கு  இது  எனக்கு  சொந்தமானது , எனது   அறிவினாலோ , உழைப்பினாலோ , அல்லது  பரம்பரையினாலோ வந்தது  இதை  நான்  ஏன்  மற்றவரிடம் பகிரவேண்டும் என்ற  சிந்தனை

எப்போதும்  சாதாரண  மனிதன்    இடதும்  இல்லை  வலதும்  இல்லை  நடுவில் இருப்பவன் . தனது  மற்றும்  குடும்பத்தின்  தேவைகள்  நிறைவேற  வேண்டும் , அதே நேரத்தில்  பக்கத்து  மனிதன் கஷ்டப்பட்டால்  உதவ  வேண்டும்  என்றும்  நினைப்பவன் .

கடந்த  சில  ஆண்டுகளில்  வலதுசாரி  சிந்தனைகள் உலகம்  எங்கும்  வலுபெறுகிறது .
இடது  சாரி மற்றும்  நடு நிலைமையாளர்கள் உலகெங்கும்  தோற்கடிக்க  படுகிறார்கள்.
ஒரு  சாதாரண  நாடு நிலை மனிதனை  உனது  வேலை  அவர்களால்  பறி போய்  விடும் , உனது நாட்டு  செல்வங்களை  அவர்கள் அனுபவிக்கிறார்கள் . அவனால்  உனது  குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கபட்டுள்ளது   என்று  பயமுறுத்தபடும்  நடு நிலைமை  உடையவன்  வலது சாரி  சிந்தனையை நோக்கி  செலுத்த படுகிறான்.

இதை  டொனால்டு  டிரம்ப் அமெரிக்காவில்  செய்தார் . பிரெக்ஸிட் க்கும்  இதுவே  காரணம் .. மோடி, RSS  இதையே இந்து  தேசிய  வாதமாக கட்டமைத்து வெற்றி  பெறுகிறார்கள் . இதையே  சீமான் ,  போன்றோர் தமிழ்  தேசியம்  என்ற  அளவில்  கட்டமைக்க முயலுகின்றனர்.

இந்தியாவில்   இடதுசாரி  இயக்கங்கள் போராட்டம்  செய்து  வேலை  வாய்ப்பு இல்லாமல்  செய்து  விடுவார்கள்  என்று ஒரு  தோற்றம்  உருவாகி  விட்டது , அதனால் இளைஞர்களை  ஈர்க்க  முடியவில்லை  .இந்தியாவில், நடு  நிலைமை  இயக்கமான  காங்கிரஸ் , மாநில  கட்சிகள் சிந்தனை ரீதியாக  எதிர்க்க  முடியாமல்  தங்களின்  மேல்   சுமத்தப்பட்ட   ஊழல்  குற்றச்சாட்டுகளுடன்  போராடி  வருகின்றன.

ஒவொரு  சிந்தனையும்  ஒரு  உச்சத்தை  அடையும் , அதனால்  பயன்  அடையும் என நினைத்து  தலையில்  தூக்கி  வைத்து  ஆடும்  சாதாரணன்  பயன்  இல்லை  என  உணரும்  போது  தூக்கி  எறிந்து  விடுவான்.

( பி.கு) நான்   ஒன்றும்  பெரிய அப்பாடக்கர்   இல்ல , திடீர்ன்னு  படிச்சத  ,நினைச்சத  நம்ம  நண்பர்களிடம்  பகிரநினைத்தேன் .. தவறுகள் இருப்பின்  மன்னிக்கவும்


Tuesday, 18 April 2017

OPS Vs TTV Vs எடப்பாடி

தமிழகத்தின்  மக்கள் தொகை  பெருக்கத்தின்   (Fertility rate)அளவு ஒரு   பெண்ணிற்கு 1.6 . தென் மாநிலங்கள் அனைத்தும்  ஏறக்குறைய  இதே அளவுதான் .  மத்திய   இந்தி  மாநிலங்களின்  இன பெருக்கத்தின்  அளவு  ஒரு பெண்ணிற்கு  2.8.

 தமிழகத்தின்  கல்வியறிவு அளவு ஏறக்குறைய  85%, இதே  மத்திய இந்தி  பேசும்  மாநிலங்களின்  அளவு  ஏறக்குறைய 65% மட்டுமே.
உயர்கல்வி  அடைபவர்கள்  தமிழகத்தில் கிட்டத்தட்ட  43% , மத்திய  இந்தி  பேசும்  மாநிலங்களில்  இது  கிட்டத்தட்ட  27% சதவீதம்  மட்டுமே.

இதன்  காரணமாகத்தான்  பெரும்பாலும்  தமிழகத்தில்  உடல்  உழைப்பு  தொழிலாளர்கள்  எண்ணிக்கை  குறைகிறது, படித்த  தமிழ் இழைஞர்கள்  மாநிலத்தைவிட்டோ , தேசத்தை  விட்டோ  கடந்து  பணி  புரியும் சூழ்நிலையும்  ஏற்படுகிறது.
மேலும்  படிக்காத  உடல்  உழைப்பு  பிற  மாநில தொழிலாளர்கள் தமிழகம்  நோக்கி  வர காரணம் .


மிக  அதிகமான  உயர்  கல்வியை  தந்த  நாம் , அந்த அளவு  வேலை வாய்ப்பை  உருவாக்க     முடியுமா  தெரிய வில்லை ?.. மேலும்  இந்த  நிலை  நீடித்தால் அடுத்த  சில  ஆண்டுகளில்   80 களில்  இருந்தது போன்று  வேலை வாய்ப்பு இன்மை   ஏற்படும்  வாய்ப்பு   உள்ளது . அடுத்த சில  வருடங்களில்  50 லட்சத்திற்கும்  மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை  இல்லாமலோ/  தகுதிக்கு  ஏற்ற  வேலை  கிடைக்காமல் தமிழகத்தில் மட்டும்  இருப்பார்கள். ஒரு சமுதாயத்தில் நான்கு  அல்லது  மூன்று  இளைஞர்களில்  ஒருவருக்கு  வேலை  வாய்ப்பு  இல்லாமல்  இருப்பது   பற்ற வைக்க  தயாராக  வெடிகுண்டை  கையில்  வைப்பதற்கு  சமம் .   ( ராம்குமார் ,ஸ்வாதி கொலை  எல்லாம் ஒரு சில  துவக்கங்கள் தான் )

இதை  எல்லாம்  யோசித்து   எதிர்காலத்தை  நோக்கி  செயல்பட  இதுவே  தருணம் . வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு  நாம் ஒபிஸ் vs  TTV  vs  எடப்பாடி  விளையாட்டு  விளையாட  கூடாது.  உதவ  வேண்டிய  மத்திய  அரசோ  பிள்ளையை  கிள்ளி  தொட்டிலை  ஆட்டி  கொண்டு  இருக்கிறது.
 யார்  ஆண்டாளும்  மக்கள்  நலத்தை  நோக்கி  சிந்தியுங்கள் .
  எதிர்காலத்தை  நோக்கி  சிந்தியுங்கள் ?


இந்த  தலைப்பு  வைத்தால் நிறைய  பேர் படிப்பார்கள்  என்பதை  தவிர  வேறு  காரணம்  இல்லை .


Thursday, 30 March 2017

பொது வாழ்வில் நேர்மை எவ்வாறு இருக்க வேண்டும்

பொது வாழ்வில்  நேர்மை  எவ்வாறு  இருக்க வேண்டும் ?

சாணக்கியர்  தனது  அறையில்  உட்க்கார்ந்து  படித்து மற்றும் எழுதி  கொண்டு இருந்தார்  , அப்பொது  ஒரு  விளக்கு  எரிந்து கொண்டு  இருந்தது  , சிறிது  நேரம் கழித்து  அந்த  விளக்கை  அணைத்து  விட்டு  இன்னொரு  விளக்கை  பற்ற  வைத்து  எழுத ஆரம்பித்தார்.
அதை  கவனித்த  அவர் மகள்  அப்பா , என்  நீங்கள்  அந்த  விளக்கை  அணைத்து  விட்டு  மற்றொரு   விளக்கை பற்ற  வைத்து கொண்டு எழுதுகிறீர்கள்  என்று  கேட்டாள்.

அதற்கு  சாணக்கியர் , முதலில்  நான் அரசாங்க  பணி   செய்து  கொண்டு  இருந்தேன் , அதனால்  அரசாங்கம்  தந்த எண்ணையில்  எரிந்த விளக்கை  பயன்படுத்தினேன், இப்போது  எனது  தனிப்பட்ட  பணியை  செய்கிறேன் , அதற்கு அரசாங்கம்  தந்த  எண்ணையில்  எரியும்  விளக்கை  பயன்படுத்துவது  தவறு , அதனால்  எனது சொந்த பணத்தில் வாங்கிய  எண்ணையில்  எரியும் விளக்கை  பயன்படுத்துகிறேன்.

  சிறிய  தவறு  தானே  என்று  நான் இன்று செய்தால்  ,  நாளை அந்த  பழக்கம்  பெரிய  தவறு  செய்யவும்  தூண்டும்  என்று கூறினார்.

பொது வாழ்க்கையில்  இருக்கும்   அனைவரும்   இந்த  சாணக்கிய  நீதியை கடை பிடித்தால் இந்த நாடு கண்டிப்பாக முன்னேறும்.

Wednesday, 22 March 2017

அதிகாரம் அவர்களுடைய கையில்

அதிகாரம் அவர்களுடைய கையில் ...,

 தீர்ப்பு  மாத  கணக்கில் ஒத்தி வைக்க படுகிறது, வேண்டும்  என்றவுடன்  தரப்படுகிறது ... ஏனனில் அவர்களே நீதி மன்றம்.
 
எத்தனை சட்டமன்ற  உறுப்பினர்கள்  இருந்தாலும் , அவர்கள்  தலை அசைத்தபிறகு தான்  ஆளுநர் பதவி  பிரமாணம்  செய்து  வைப்பார். ஏனெனில்  அவர்களே  ஆளுநர்கள் .

முதலைமைச்சர்கள் தோற்கடிக்கப்பட்டாலும் , இரண்டவது  இடத்துக்கு  சென்றாலும் , வெற்றியை பண ,அதிகார பலத்தின்  மூலம் திருடலாம் . (கோவா ,மனிப்பூர் ) ஏனெனில் அவர்களே  அரசியல்  சட்டம் .

கட்சி  பெரும்பாலான  தொண்டர்கள் , நிர்வாகிகள்  ஆதரவு  , இல்லாமல் , வெறும்  காகிததில்  கணக்கு  காட்டினால் , மூன்றாவது  பெரிய  கட்சியின் சின்னம் முடக்கப்படும் . ஏனெனில்  அவர்களே  தேர்தல்  ஆணையம் .

எதிர்ப்பவர்கள் கோமாளிகளாகவும் , தேச துரோகிகளாகவும்                        சித்தரிக்க  படுவார்கள் . ஏனனில்  அவர்களே  ஊடகம் ..

ஆனால்  இந்த  தேசம் அனைத்தையும் கடந்தது வந்து உள்ளது  , ஒற்றை  பெண்மணி  தான்  இந்தியா என்று இருந்த காலத்தையும் பார்த்தது அவரின்  தோல்வியையும்  பார்த்தது .

இது  அவர்களின் காலம் , விளையாடட்டும் ,
வீசும்  காற்று மாறும் .Friday, 10 March 2017

வாழ்க்கையின் ஆச்சரியங்கள்.

.எனது சின்ன வயதில்தான் எத்தனை  ஆச்சரியங்கள் மற்றும் சந்தோசங்கள்.

 ஊருக்கு மேல்  எப்போதாவது பறக்கும் விமானங்கள்,
 தொட்டால் சிணுங்கி செடி,
 ஒளியும்  ஒலியும் வரும்  திடீர் புதிய பாடல்கள்,
 இரண்டாம் வகுப்பு  ரயில்பயணதில்  பின்னோக்கி ஓடும் மரங்கள்,
பிரச்சாரத்துக்கு வந்த ராஜிவ் காந்தியை அருகில் பார்த்தது ,
உலக தமிழ்மாநாட்டின் போது பார்த்த மிதவை பாலம் ,
திடீரென வரும்  கோடைமழை ,
முஸ்லீம் நண்பர்  வீட்டு திருமண  கறி   பிரியாணி .
தினமலர்  தீபாவளி மலர் ஆளுயுர  ரஜினி கமல் போஸ்டர் ,
கொள்ளிடம்  ஆற்றின் அகலம் ,
ஏப்போதாவுது பார்க்கும்  சென்னை நகரத்தின் உயரமான  கட்டிடங்கள்,
 5 தியேட்டர்கள்  ஒரே இடத்தில் இருந்த   மாரீஸ் தியேட்டர்.
ரஜினி படத்தின் முதல் நாள் டிக்கெட்,
உள்ளூரில்  நடந்தால் மட்டும்  கண்டிப்பாக ஜெயிக்கும் எங்க  ஊரு கபடி டீமின்  வெற்றி.

 ஜூன் மாதத்தில் இருகரையையும் தொட்டு கொண்டு நுரையுடன் வரும் காவிரி  தண்ணீர் ,
 எப்பதாவது  நம்மிடம் நேரடியாக  பேசும் பள்ளியின் தாவணி பெண்கள் ,
 முதல் 3 ரேங்கில்  வரும்பொழுது தரும்   ரேங்க் கார்டு,
எப்போதாவது   இருக்கை  காலியாக  வரும்  அரசு பேருந்து.
இப்படி எல்லாமே ஆச்சரியம்...

ஆனால் எனது மகனுடைய தலைமுறைக்கு ஆச்சரியங்கள்  எதுவும் மிச்சம் உள்ளதா   என்று தெரியவில்லை ?

உலக  அதிசயத்தையே நேரில் காட்டினாலும், அப்படியானு பார்த்து அடுத்த வினாடி  மொபைல் கேம் விளையாட  ஆரம்பித்து  விடுகிறார்கள்..

Sunday, 29 January 2017

கருணாநிதி வழியில் சசிகலா , ஜெயலலிதா வழியில் ஸ்டாலின்

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசியலின் 2 ஆளுமைகள் கலைஞர் கருணாநிதி மற்றும்  புரட்சி தலைவி  ஜெயலலிதா ..

கலைஞர் அரசியல் அதிக  ஜனநாயகமானது ,
 குடும்பத்தில்  ஒருவருக்குத்தான்  சட்ட மன்ற  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பு  என்று  என்று  கலைஞர்  கூறிய போது  அப்போ   ஸ்டாலினுக்கு   போட்டிஇட  வாய்ப்பு  அளிக்க  மாட்டிர்களா என்று  கேட்க்கும்  இரண்டாம்  நிலை  தலைவர்கள்  இருந்தனர் .
எதிர்த்து  கேள்வி  கேட்பவர் களையும்   அனுசரித்து  செல்லவே  முயற்சி  செய்வார்.  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பு  கொடுத்து  போட்டியிட  மறுத்தவர்களையும் கட்சியை  விட்டு  நீக்க  மாட்டார்.

அம்மா அவர்கள்  கட்சி  ராணுவ  கட்டுப்பாட்டில்  இருக்க  வேண்டும் என்பதை  விரும்புபவர்.  கட்சியில்  இருந்து  கொண்டு  எதிர்த்து  பேசுவது என்பதை  நினைத்து  பார்க்க  கூட முடியாது. அம்மா அவர்களை தவிர  இரண்டாம்  நிலை  தலைவர்கள்  யாரும்  முன்னிலை  படுத்த  பட  மாட்டார்கள் .
 கலைஞரிடம்  அரசியல்  பயின்ற ஸ்டாலின்  இப்போது  விரும்புவது  ஜெயலலிதா  பாணி  அரசியலையே , பெரும்பாலும்  அவரே  முன்னிலை  படுத்தபடுகிறார்  , தலைமையின்  முடிவை   யாரும் கேள்வி   கேட்க கூடாது . கட்சி  முழுவதும்  தனது  ராணுவ  கட்டுப்பாட்டில் இயங்க  வேண்டும்  என்று  விரும்புகிறார்.

அம்மாவிடம்  அரசியல்  பயின்ற  சசிகலா  இப்போது  கடைபிடிப்பது  கருணாநிதி  பாணி  அரசியலை . எதிர்த்து அறிக்கை  விட்ட கே பி முனுசாமி  இன்னும்  கட்சியில்  இருக்கிறார் . நாஞ்சில்  சம்பத்  கூட  சமாதான  படுத்தபட்டார் . இரண்டாம்  கட்ட  தலைவர்கள்  முன்னிலை படுத்த  படுகிறார்கள்.

இன்னொரு  விசயம் , கலைஞர்  அடிக்கடி  மாநில  உரிமை , திராவிடம் அப்டின்னு  கத்தி  சுத்துவார்.  ஸ்டாலின்  அது எதுவும் செய்வதில்லை . ஆனால்  நடராஜன்  கலைஞர்  வழியில் மாநில  உரிமை , திராவிடர்  என்று  எல்லாம்  பேசுகிறார் .


ஆக , கலைஞர்  வழியில்  சசிகலாவும் , அம்மா  வழியில்  ஸ்டாலின் நடை  போடுகிறார்கள்  

Thursday, 12 January 2017

ஜல்லிக்கட்டு தடையும் , தமிழ் பொருளாதாரமும்

ஜெயம் ரவி தனி  ஒருவன் படத்தில்  கூறுவது போல , 6 ம் பக்கத்து பொருளாதார செய்திகள்  தான்  மற்ற  பக்க செய்திகளை  தீர்மானிக்கிறது . பொருளாதாரத்தில்  சிறந்து  இருக்கும்   ஜப்பான்  போன்ற நாடு அணு  ஆயுதம்  இல்லாமலே  வலிமையான  நாடாக  இருக்கிறது.

இந்திய  நிறுவனங்களை  ஏன்  ஊக்குவிக்க  வேண்டும் ?, வெளிநாட்டு  நிறுவனங்கள்  ஒரு சந்தையாக   மட்டும்  பார்க்கும்  பொழுது , இந்திய  தொழில்  நிறுவனர்கள்  சந்தையாக  மட்டும்  பார்க்காமல்  ஒரு நாடு என்று  ஒரு  உணர்வுடன்  பார்ப்பார்கள்  என்ற  நம்பிக்கை  தான் . மேலும்  வரும்  வருமானத்தை  இந்தியாவிலேயே  முதலீடு  செய்வார்கள்  என்ற  நம்பிக்கையும்தான் . போர், இயற்கை பேரிடர்   போன்ற தருணங்களில்  சந்தை  கண்ணோட்டம்  இல்லாமல்  உதவுவார்கள்  என்ற  நம்பிக்கையும்தான் .

இதே காரணத்திற்காக  நாம்   நமது  மாநிலத்தில்  தமிழ்  நிறுவனங்களையும் , தமிழ் தொழில் அதிபர்களையும்  ஆதரிக்க  வேண்டும். உதாரணமாக  தமிழ்  திரைப்படங்களை  பார்த்து  தமிழ்  திரையுலகத்தை  உயிர்ப்பாக  வைத்து  இருப்பதால் , தமிழ்  திரை உலகம்  உரிமையோடும் , உணர்வோடும்   ஜல்லிக்கட்டு , காவேரி  நீர்  பிரச்சனை  போன்றவற்றிற்க்கு குரல்  கொடுக்கின்றனர்.
இத்தகைய  குரலை  நம் அனைவரும் இந்தி  திரைப்படத்தை மட்டும் பார்த்து  இருந்தால் ஷாருக் கானிடமோ ,சல்மான்கானிடமோ  எதிர் பார்த்து  இருக்க  முடியாது .


 உள்ளூர்  அண்ணாச்சியை அழித்து  விட்டு , பன்னாட்டு  மளிகை கடையில்  வாங்க  ஆரம்பித்தால்  என்ன ஆகும்?, அண்ணாச்சி  கடையில்  நடப்பது வெறும் வியாபாரம்  மட்டும் அல்ல  அங்கு  ஒரு  நட்பு,  உறவு, அன்பு   எல்லாமே நடக்கிறது ,  வார்தா  புயலின்  போது  கார்டு  வேலை  செய்யா  விட்டாலும்  , ATM ல் இருந்து  காசு  எடுக்க முடியாவிட்டாலும் உரிமையுடன் அடுத்த  வாரம்  தருகிறேன் என்று  பொருள்  வாங்கினோம் மற்ற  இடங்களில் முடியுமா ?

இன்னொன்று , போட்டியார்களை  வைத்து  இருக்கும்  பொழுது  மட்டுமே வாடிக்கையாளர்  சந்தையாக  இருக்கும் , போட்டியாளர்களை  ஒழித்து  விட்டு  ஒரே  ஆளிடம்  இருந்தால் சந்தையில்  அவன் சொல்வதே  விலையாக  இருக்கும்?

இதற்க்காக  தர  குறைவான  பொருளையோ /.சேவையோ   வாங்குங்கள்  என்று  சொல்லவில்லை , இரண்டு பேரிடமும்  ஓரே  தரமான சேவையோ / பொருளோ  தரும்  போது , சிறு விலை  குறைப்பை  பொருட்படுத்தாமல் உள்ளூர்  வியாபாரத்தை  ஊக்குவிக்க வேண்டும் .

உதாரணங்கள் :-
   சென்னையில்  பல  ஆண்டுகளாக  ஒரு தமிழ் நிறுவனமான பாஸ்ட் ட்ராக்  வாடகை  கார்  சேவையை வழங்கி  வருகிறது . ஆனால்  சர்வதேச  நிறுவனமான  உபேர் , ஓலா  ( பெரும் சர்வதேச  முதலீடு) போன்றவை  மிக  பெரிய  விளம்பரத்துடன் , பெரும் முதலீட்டுடன்  களம்  இறங்கியுள்ளன.   இவர்களை  போன்றவர்களை  கண்முடித்தனமாக  ஆதரித்தால்  இங்கு  உள்ள  பாஸ்ட்  ட்ராக்  போன்ற  உள்ளூர்  நிறுவனங்களையும் ,  சிறு ட்ராவல்  ஏஜென்சிகளையும்  அழித்து  விடுவார்கள் .  இன்று  இவர்களது   சிறு  இலவசத்திற்கு   ஆசைப்பட்டால்  நாளை  சந்தையில்  அவர்கள்  சொல்வதே  விலையாக  இருக்கும் .
இதே போல் பெப்சி , கோக்  க்கு  போட்டியளிக்கும்  காளி மார்க். சீன  பட்டாசுக்கு  எதிர்த்து  நிற்கும்  சிவகாசி  பட்டாசுகள் , ஆச்சி மசாலா , போன்று  பல   தமிழ் நிறுவனங்கள்

தமிழ்நாடு  தொழில்  அதிபர்களை  ஆதரிப்பதன்  மூலம் நமது  மாநில  பொருளாதாரம்  வலுவடையும் , இங்கு  மேலும்  முதலீடுகள்  நடக்கும் .  மாநில  வாழ்வாதார  பிரச்சனைகள் , இயற்கை  பேரிடர்  போன்றவற்றின்  போது  தமிழராய் ஆதரிப்பார்கள் .

ஜல்லிக்கட்டு தடை  , காவிரி  நீர் கேட்டு  போராடுவது மட்டும் போராட்டம்   அல்ல ,  இதே போன்று தமிழ்  நிறுவனங்களை , தமிழர்  தயாரிக்கும் பொருள்களையும் ,சேவைகளையும்  பயன்  படுத்துவதும்  ஒரு  போராட்டம் தான் . வலுவான  தமிழக  பொருளாதாரத்தை  உருவாக்குவோம் . நாம்  வலுவான  பொருளாதார  சக்தியாக  உருவெடுக்கும் போது , இந்த  தேசம் நம்மை  நிமிர்ந்து  பார்க்கும்  ,நாம்  வைத்ததும்  சட்டம் ஆகும் . இது  பிரிவினை  வாதம்  இல்லை  , தேசத்தை  நம்மை  நோக்கி  திருப்ப  ஒரு  முயற்சி .


நாளைய  போராட்டத்திற்கு  வீதிக்கு  வர வேண்டியதில்லை , வாங்கும்  பொருளிலும் /சேவையிலும் ஒரு  கவனம் இருந்தால்  போதும்.


Tuesday, 10 January 2017

பொங்கல் விடுமுறை.. அசால்ட் சேது (Bjp) வின் அடுத்த அட்டாக்

ஜல்லிகட்டு தடை,பொங்கல் விடுமுறை ரத்து... "டெல்லி, பம்பாய் போக வேண்டும் என்றால் தமிழர்களுக்கு பாஸ்போர்ட்  வேண்டும் "மத்திய பிஜேபி அரசின் அடுத்த அறிவிப்பாக இருக்க கூடும்...

இந்தி படித்து கொள்ளுங்கள்,
பொங்கல், ஜல்லிகட்டு எல்லாம் மறந்து சாட் பூஜை செய்யுங்கள்,
இட்லி, தயிர் சாதம் மறந்து சாப்பாத்தி சாப்பிட பழகி விடுங்கள்.
 கறி, கோழி சாப்பிடாம தால் சாப்பிட பழகிங்கள்,
வேட்டி, சட்டைக்கு பதிலா ரெண்டு செட் பைஜாமா, ஜிப்பா தைத்து விடுங்கள்,
கெடா வெட்டி கும்பிடற  கருப்பண்ண சாமி, ஐயனார் எல்லாம் விட்டு ராமர், கிருஷ்னர கும்பிடுங்கள்
தேசிய நீரோட்டத்தில் பழைய தமிழர்  கலாச்சாரத்தை எல்லாம் தலை முழ்கி எந்திரிச்சா நீங்கள் முழுமையான  "இந்தி"யன் ஆகி விடுவிர்.
 கஷ்டம்னு சொன்னா எல்லையில் உள்ள ராணுவ வீரன் பொங்கல் கொண்டாடுறானா? இல்ல  இட்லி தான் சாப்ட்றானா என்று கேட்பார்கள்
சீக்கிரம் தேச பக்தி உடைய இந்தியன் என்பதை நிருபித்து விடுங்கள்.

Thursday, 5 January 2017

தகவல் தொழில் நுட்ப துறை - பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மண்ட் வீக்


சாப்ட்வேர், ஐடி ,90 களின் தொடக்கத்தில் இருந்து  கடந்த  25 ஆண்டுகாலமாக  தமிழகத்தின் மத்திய தர வர்க்கத்தின் மந்திர சொல்லாக  மாறி  விட்ட வார்த்தைகள்.பக்கத்து  வீட்டு மாமா   தனது  மகன்கள் சாப்ட்வேர்ல  செட்டில்  ஆகி விட்டார்கள்  என்று  சொல்லும் போதே  அவருக்கு  ஒரு பெருமிதம்.

சென்னையின்  LIC  கட்டிடத்தையே  பெரும்  ஆச்சரியமாக  பார்த்து  வளர்ந்த  தலைமுறைக்கு ,சென்னை  புறநகரங்களில்  திடீரென  ராட்சதனாக  முளைத்த  கண்ணாடி  கட்டிடங்களில்  தனது  மகன்/மகள்  அலுவலகம்  இருக்கிறது  என்பது  ஒரு பெருமிதமாக தானே இருக்கும்.

 ஊருக்கு  ஒரு  ஜாவா  சுந்தரசேன்கள் உருவானார்கள் .  வேலைக்கு  சேந்த  வருஷம்  பைக், 3 வது  வருஷம்  கார்  , 4 வது வருஷம்  புறநகரில் பிளாட் ,கல்யாணம் என்று  முன்னேற்றம் , ரிட்டையர் மென்ட்  ஆக  4 வருஷம்  முன்னாடி  வீடு  வாங்கிய அப்பாக்கள்  ,வேலைக்கு  சேர்ந்த  4 வருஷத்தில்  வீடு  வாங்கிய மகனை  பார்த்து  மிரண்டார்கள்.

ஜாவா  சுந்தரேசனை பார்த்து, வீட்டுக்கு  ஒரு மரம்  வளர்கிறோமோ  இல்லையோ  வீட்டுக்கு  ஒரு  சாப்ட்வேர்  என்ஜினீயர் வளர்ப்போம் ன்னு  தமிழரகள்  கிளம்பினர் .   நீங்க  வீட்டுக்கு  ஒரு  என்ஜினீயர்னா நாங்க  தெருவுக்கு  ஒரு  இன்ஜினியரிங்  காலேஜ்   திறப்போம் ன்னு  கல்வி  வள்ளல்களும்  தயாராகினர்.

பையனுக்கு  எந்த  எந்த  கெட்ட பழக்கமும்   கிடையாது ,  மெக்கானிக்கல்  படிச்சிருக்கான் ,நல்ல சம்பாதிக்கிறான்னு
பொண்ணு  கேட்டு போனா , பொண்ணோட  அப்பா  " இல்லைங்க பொண்ணு  CS புடிச்சிருக்கு ,  IT க்கும் IT  க்கும் தான்  செட்டாகும்னு சொல்லி  , IOS போன்ல ல  anderiod  இன்ஸ்டால்  பண்ண  சொன்ன  மாதிரி   பார்த்து ஆச்சரியபட்டார் .  பிறதுறை  பட்டதாரிகள்  பொண்ணு  கிடைக்கவே  கஷ்டப்பட ஆரம்பித்தார்கள்

மேட்டூர்  நீர்மட்டத்த  பத்தி  கவலைபடும்  நம்ம  ஊர்  பண்னையார்  திடிர்னு ஒருநாள்  அரிக்கன்ன்னு  கவலைப்பட  ஆரம்பித்தார்.   அரிக்கன்  இல்லாட்டி  என்ன  டார்ச்  லைட்  இருக்கு பண்னைன்னு  சொன்னவனை  பார்த்து ,  அமெரிக்கால  தம்பி வேலை செய்ற ஊரில் புயலாம்  அப்டினு  சொல்றார்.

IT  நண்பர்களை  தெருவில்  பார்த்தால், நாம  ஒரத்தநாடுலருந்து  தஞ்சாவூர்  போனத  சொல்ற மாதிரி  போன மாசம்தான் நியூ யார்க்  on site  போய்ட்டு வந்தேன்  சொல்லி  நமக்கு  ஒரு  US  மேட் ஜவ்வு  மிட்டாய்  கொடுத்து ஆச்சரியபடுத்தினர்.

டெல்ட்டாவில்  இருந்து  பெங்களூரு  ல்  IT  வேலையில்   செட்டில்  ஆகிய  நண்பன் ,  சென்ற  ஆண்டு காவிரி பிரச்சசனையின் போது   யாரு ஊர்ல  விவசாயம்  பாக்குறாங்கன்னு நம்ப  ஊர்ல பிரச்சனை  பன்றாங்கனு கேட்டு  அதிர வைத்தான் .அவர்களின்  உலகம்  மொபைல்  /லேப்டாப்  ஸ்க்ரீன்   அளவு  சுருங்கி  விட்டது .

நம்ப  தஞ்சாவூர்  பெரிய  கோவில், மணி மண்டபம் , கல்லணை ன்னு  பொண்டாட்டி  புள்ளைகளை   கூட்டிகிட்டு போனா , நம்ப  ஆளுங்க  ஈபில்  டவர், சுதந்திர  தேவி  சிலை  முன்னாடி  குடும்ப போட்டோ  எடுத்து  சமூக  வலைதளத்தில்  போட்டு நம்ம   பேமிலி   நம்மள  டம்மி  பீஸா  பார்க்க   வைத்தனர்.

 நண்பர்  வீட்டுக்கு  போனா, நண்பர் மற்றும் மனைவி  தங்கள் குழந்தைகளிடம்  ஆங்கிலத்தில்  தான் உரையாடினார்கள் . என்னடா  தமிழுக்கு  வந்த  சோதனைன்னு  கேட்டப்போ , இவருக்கு onsite கிடைச்சா USல  பிள்ளைகளுக்கு  எளிதாக  இருக்கும்னு  இங்கேயே ஒரு   USA   உருவாக்கி  கொண்டு  இருந்தார்கள் .  நல்ல  வேலை  நம்ப  ஜனாதிபதி   டொனால்ட்  டிரம்ப்ன்னு  சொல்லி கொடுக்காமல் விட்டு வைத்துள்ளனர். இவர்களுக்காகதான்   தெரு  முனையில்  MCDONALDS ,KFC  திறந்து  வைத்து  இருக்கிறான் போல.

கூட்டுறவு  வங்கி கடனுக்கு  நாலு  ஜாமின் காரர்களுடன்  நாலு முறை  நடந்த  குப்புசாமி மகன் இன்று  நாலு கிரெடிட் கார்டு வைத்து  கொண்டு  அலைகிறான்.இது  உண்மையான வளர்ச்சியா ன்னு  தெரியவில்லை

விலை வாசி  ஏறிடுச்சு , ரியல் எஸ்டேட்  ஏறிடுச்சு , கலாச்சாரம்  சீரழியுது ன்னு  ஆயிரம் குற்றம்  சொன்னாலும் .

இன்று  வறட்சியில் 100 கணக்கில் நடக்கும் தற்கொலைகள்  ஆயிர கணக்கில்   இருந்து  இருக்கும் தொழில் நுட்ப துறையின்  வளர்ச்சி இல்லாமல்,  புதிய  தலைமுறை  சம்பாதித்து  தந்தையின்  விவசாயத்தையும் ,பொருளாதாரத்தையும்  காப்பாற்றுகிறார்கள் . குடும்பத்தை வறுமையில்  இருந்து  வளர்ச்சிக்கு  மாற்றி  காட்டிய  ஆயிரம்  இளைஞர்கள்/  பெண்கள்  உள்ளனர்.

 நமது  மாநிலம்  மற்ற  மாநிலத்தை வளர்ச்சியில்  பின்  தங்காமல்  பார்த்து  கொண்டதிலும்  பங்கு  உள்ளது .

அரசு  அலுவலகங்களிலும், பள்ளிகளிலும்  கூட  ஒழிக்க  முடியாத  சாதி  ஓரளவு  இங்கு ஒழிந்துள்ளது.

ஆயிரம்  மேடைகளில்  பேசினாலும் வாங்கி  தர  முடியாத பெண்  சுதந்திரத்தை வாங்கி  தந்து உள்ளது .  சம  வேலைவாய்ப்பு , சம ஊதியம் , சம  பணி  உயர்வு  இங்கு  பெண்களுக்கு  சாத்திய பட்டுள்ளது.

கல்யாணம்   ஆகாத  பொண்ணும் , பையனும்  பேசினால்  காதல்  தவிர  வேற  இல்லை  என்கிற  தமிழ் சினிமா  பார்த்து  வளர்ந்த  தலைமுறைக்கு  ஆண் பெண்  தோழமை   சாதாரனம்   என்னும்  உண்மையை   உணர்த்தியது.

 எனினும் வெளிநாட்டை  விட  ஊதியம்  குறைவு  என  இந்தியா  வரும்  நிறுவனங்கள் நம்மை  விட  குறைவான  ஊதியத்திற்கு  ஆள்  கிடைத்தால்   அடுத்த  நாட்டுக்கு செல்லும்  வாய்ப்புகள்  உள்ளது . அரசுகள் ,மற்றும்  கல்லூரிகள்  கூலி  ஆட்களை  தயாரிக்கும்  நிறுவனமாக  இருக்காமல்  இந்திய தொழில்  முனைவர்களையும் , ஆராய்ச்சி  மற்றும்  மேம்பாடு முலமாக  இந்திய  தொழில் நுட்பங்களை  உருவாக்குவதன்  மூலம்  தான்  இந்த  வளர்ச்சியை  தக்க  வைக்க  முடியும்.

இல்லா விட்டால் தொழில் நுட்ப துறை - பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மண்ட் வீக் கதை யாகி விடும்

(நான்  ஒரு  தகவல் தொழில் நுட்ப  துறையை சேராத   ஆள்  என்பதால்  எனது புரிதலில்  குறைபாடு  இருந்தால்  வருந்துகிறேன் )